குறும்செய்திகள்

கொரோனா வைரஸ் மனிதர்களை கொல்வது எப்படி தெரியுமா..!

Know how Coronavirus kills humans

உலகையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் மனிதர்களை கொல்வது எப்படி என்பது குறித்து விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

“கொரோனா” எனும் இந்த வார்த்தைதான் இன்றைக்கு உலகமெங்கும் அதிகளவில் உச்சரிக்கப்படுகிற ஒரு வார்த்தையாக அமைந்து இருக்கிறது.

சீனாவின் மத்திய நகரமான உகானில் கடந்த டிசம்பர் 1 ஆம் திகதியன்று இந்த வைரஸ் தென்பட்டது. இந்த 5 மாத காலகட்டத்தில் உலகின் 187 நாடுகளிலும், பிரதேசங்களிலும் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது இந்த வைரஸ்.

அதுமட்டுமல்லாமல், உலகமெங்கும் இந்த வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 43 லட்சத்தை தாண்டியது. இந்த கண்ணுக்குத் தெரியாத வைரஸ், 2 லட்சத்து 95 ஆயிரத்து 400-க்கும் அதிகமானோரை நம் கண்ணுக்குத் தெரிய கொன்று விட்டது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு முடிவு கட்ட மருந்து கண்டுபிடிக்கவும், வராமல் தடுப்பதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கவும் அமெரிக்கா, இங்கிலாந்து என உலகின் முன்னணி நாடுகள் பலவற்றின் விஞ்ஞானிகள் ஆய்வுக்கூடங்களில் இரவு-பகல் பாராமல் மாய்ந்து மாய்ந்து ஆராய்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

இதற்கு மத்தியில் கொரோனா வைரஸ் எப்படி இப்படி லட்சக்கணக்கானோரை கொன்று குவிக்கிறது என்பது பற்றியும்கூட ஆராய்ச்சி நடந்து இருக்கிறது.

இந்த ஆராய்ச்சியை நடத்தி முடித்திருப்பவர்கள் சீனாவின் ஜூன்யி மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஆவார்கள்.

இந்நிலையில், இந்த ஆராய்ச்சி தொடர்பில் “பிரண்டியர்ஸ் இன் பப்ளிக் ஹெல்த்” என்ற மருத்துவ இதழில் விளக்கமாக வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆராய்ச்சி விஞ்ஞானிகள், எப்படி இந்த வைரஸ் படிப்படியாக காற்றுப்பாதைகளை பாதிக்கிறது, உள் உயிரணுக்களை எவ்வாறு பெருக்குகிறது என்பது பற்றியெல்லாம் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.

அதன் முக்கிய அம்சங்கள்.. :-

* முதலில், நோய் எதிர்ப்பு மண்டலத்தின் அதிகப்படியான செயல்பாடுகள் மூலம்தான் கொரோனா வைரஸ் மனிதர்களை கொல்கிறது.

* சார்ஸ் மற்றும் மெர்ஸ் தொற்றுக்கு பிறகு என்ன நடந்ததோ, அதே போன்றுதான் கோவிட்-19 என்னும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின்னரும், நோய்த்தொற்று கடுமையான நிலையில் சைட்டோகைன் புயல் சின்ட்ரம் ஏற்படும் நிலை உள்ளது.

* அதிரடியாக அதிகரித்த சைட்டோகைன்கள், லிம்போசைட்டுகள் மற்றும் நியூட்ரோபில்ஸ் போன்ற நோய் எதிர்ப்பு உயிரணுக்களை அதிகளவில் ஈர்க்கின்றன. இப்படி ஈர்க்கிறபோது, இந்த நோய் எதிர்ப்பு அணுக்கள், நுரையீரல் திசுக்களில் ஊடுருவி, அதனால் நுரையீரலில் காயத்தை ஏற்படுத்துகின்றன.

* இறுதியில் சைட்டோகைன்கள் அதிகளவில் காய்ச்சல், ரத்த நாளங்களின் அதிகப்படியான கசிவு, உடலுக்குள் ரத்த உறைவு ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக ரத்த அழுத்தம் மிகவும் குறைந்து போகிறது. சுவாசக்காற்று (ஆக்சிஜன்) பற்றாக்குறை உண்டாகிறது. ரத்தத்தில் அதிகப்படியான அமிலத்தன்மை ஏற்படுகிறது. நுரையீரலில் திரவங்களையும் உருவாக்குகிறது.

* வெள்ளை ரத்த அணுக்கள் ஆரோக்கியமற்ற திசுக்களை தாக்கவும், அழிக்கவும் தவறாக வழி நடத்தப்படுகின்றன. இது நுரையீரல், இதயம், கல்லீரல், குடல், சிறுநீரகம், பிறப்புறுப்புகள் ஆகியவற்றின் செயலிழப்புக்கு வழிநடத்துகிறது.

இப்படி பல்லுறுப்புகள் செயலிழப்பு (மோட்ஸ்) நுரையீரலை மோசமாக்கி மூட வைக்கிறது. இந்த மோசமான நிலைதான், அக்கியூட் ரெஸ்பிரேட்டரி டிஸ்டிரஸ் சின்ட்ரம் (சுவாசக்குழாய் நோய்)என்று அழைக்கப்படுகிறது. இது ஹைலீன் சவ்வு உருவாவதால் நடக்கிறது. ஹைலீன் சவ்வு என்பது புரதங்கள் மற்றும் இறந்த அணுக்களின் குப்பைகளால் ஆனவை. முடிவில் இது நுரையீரலில் படிந்து, நுரையீரலானது ஆக்சிஜனை உறிஞ்சுவதை கடினமாக்கி விடுகிறது.

* ஆக, கொரோனா வைரஸ் தாக்குவதின் காரணமாக நேரிடுகிற பெரும்பாலான இறப்புகள் சுவாச கோளாறு காரணமாகத்தான் ஏற்படுகின்றன.

கொரோனா வைரஸ் தொற்று நோயை குணப்படுத்துவதற்கு என்று சிகிச்சை இல்லாத நிலையில் என்னதான் தீர்வு?

நோய் அறிகுறிகளை எதிர்த்து போராடுவதும், உறுப்புகளின் செயல்பட்டை தீவிரமாக பராமரிப்பதும்தான் வழி. இதன்மூலம் மட்டுமே இறப்பு வீதத்தை குறைக்க வேண்டும். உதாரணமாக ரத்தத்தை வடிகட்டுவதற்கு ஒரு செயற்கை கல்லீரல் சுத்திகரிப்பு அமைப்பு அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சையை செய்யலாம்.

நுரையீரல் செயல்பாட்டை மாற்றுவதற்கு, சுவாச குழாயில் ஒரு குழாயை செருகி காற்று செல்வதற்கு வழி ஏற்படுத்தலாம். மூக்கில் ஒரு குழாய் வழியாக சூடான மற்றும் ஈரப்பதமான ஆக்சிஜனை செலுத்தலாம்.

இவைதான் ஆராய்ச்சி விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பாக இருக்கிறது.

ஆனாலும் இப்படி கடினமான, சவாலான பாதைகளை கடந்து செல்வதை விட, நம் முன் தற்காப்பு கவசங்கள் இருக்கின்றன. முக கவசம், தனிமனித இடைவெளிகளை தவறாமல் பின்பற்றுதல், அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவுதல் என்னும் அந்த கவசங்களை பயன்படுத்தினால், கொரோனா என்ற எதிரி நம்மை அண்ட விடாமல் தடுக்கலாம். இதைத் தவிர வேறு நிவாரணம் கொரோனா வைரஸுக்கு இல்லை.

< Most Related News >

Tags :-Know how Coronavirus kills humans

Related posts

Android L Will Keep Your Secrets Safer

Tharshi

உலகளாவிய ரீதியில் முடங்கிய பேஸ்புக், வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் செயலிகள்..!

Tharshi

அசைவ உணவை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மை இருக்கா..!

Tharshi

38 comments

Leave a Comment