குறும்செய்திகள்

நோய் எதிர்ப்புசக்தி : கொரோனாவுக்கு தீர்வாகுமா..!!

Coronavirus immune power a solution to the Covid19

கொரோனா வைரஸின் வீரியம் எப்படிப்பட்டது என்று உறுதி செய்ய முடியாத நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை அடைய நினைப்பது சரியாகுமா..? என்பது குறித்து பார்ப்போம்.

8 மாத காலத்தில் கண்ணுக்கு தெரியாத ஒரு வைரஸ், உலகின் 200 நாடுகளில் கால் பதித்து விட்டது.

ஏறத்தாழ 60 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு இந்த வைரஸ் பரவி விட்டது. தீவிர சிகிச்சைகள் செய்து கொண்டும் பலனற்றுப்போய் சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் உயிர்கள் பறிபோய் விட்டன.

இன்னும் பரவிக்கொண்டுதான் இருக்கிறது. உயிர்களை பலி வாங்கிக்கொண்டும்தான் இருக்கிறது.

எந்த சீனாவில் கொரோனா வைரஸ் உருவானதோ, அந்த சீனாவில் தொடங்கி அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, இந்தியா, இஸ்ரேல் என உலக நாடுகள் பலவற்றில் அந்த வைரசுக்கு எதிரான தடுப்பூசியையும், மருந்துகளையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவ விஞ்ஞானிகள் மாய்ந்து மாய்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

சில நாடுகளில் தடுப்பூசிகள், மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. என்றாலும்கூட அவையெல்லாம் உலக மக்கள் அத்தனை பேருக்கும் கிடைப்பதற்கு இன்னும் குறைந்தபட்சம் ஒன்றல்லது இரண்டு ஆண்டுகள் காத்திருந்துதான் ஆக வேண்டும் என்பதுதான் நிலை.

அதற்குள் இந்த பாழாய்ப்போன கொரோனா வைரஸ் எத்தனை கோடி மக்களை பாதிக்கப்போகிறது, எத்தனை லட்சம் மக்களின உயிர்களைப்பறிக்கப்போகிறதோ என்பதே மனிதகுலத்தின் தவிப்பாக இருக்கிறது.

இந் நேரத்தில் விஞ்ஞானிகள் பலரும் கொரோனா வைரசுக்கு “ஹெர்ட் இம்யூனிட்டி” என்று அழைக்கப்படக்கூடிய மந்தை நோய் எதிர்ப்புச்சக்தி பலன் தரக்கூடும் என்று கருத்துகளை முன்வைத்து வருகிறார்கள்.

அதென்ன மந்தை எதிர்ப்புச்சக்தி..?

எந்தவொரு நாட்டில் ஒரு தொற்றுநோய் பரவுகிறதோ, அந்த தொற்றுநோயில் இருந்து நிவாரணம் பெற வேண்டும் என்றால் அதற்கு இந்த மந்தை எதிர்ப்புச்சக்தியை விஞ்ஞானிகள் பரிந்துரைப்பது உண்டு.

அதாவது நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வந்து விட்டால் அதன்மூலம் மற்ற மக்களுக்கு, அதாவது நோய் எதிர்ப்புச்சக்தி இல்லாத மக்களுக்கு தொற்றுநோய் பரவுவதை தடுக்க முடியும்.

இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் ஒன்று தடுப்பூசி கண்டுபிடிக்க வேண்டும். இந்த தடுப்பூசியை பெரும்பான்மை மக்களுக்கு செலுத்துகிறபோது, மற்றவர்களுக்கும் நோய் தொற்று பரவாத நிலை உருவாகும்.

ஆனால் தடுப்பூசி கண் எதிரே இல்லை. அதற்கு இன்னும் பல மாதங்கள் காத்திருந்துதான் ஆக வேண்டும் என்பது யதார்த்தம்.

அடுத்து இந்த மந்தை எதிர்ப்பு சக்தியை பெறுவதற்கு இன்னொரு வழி உண்டு. இந்த வழி, கொரோனா தொற்றுநோயை அப்படி மக்களுக்கு பரவ விட்டு விட வேண்டும். இதன்மூலம் அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும். நோய் தொற்று ஏற்படுகிறவர்களின் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி உருவாகும். இதனால் மற்றவர்களுக்கு தொற்று பரவுவது தடுக்கப்படும். ஆனால் இதில் ஒரு ஆபத்தும் உண்டு.

கொரோனா வைரஸ் புதிய வைரசாக இருப்பதால் அதன் இயல்பு அல்லது மாறும் தன்மை இப்படித்தான் என்று விஞ்ஞானிகளால் இன்னும் அறுதியிட்டுக்கூற முடியாத நிலையில், இப்படி பெரும்பான்மை மக்களுக்கு தொற்றை பரப்புவது சிக்கலில் கொண்டு போய் விட்டு விடலாம். ஏனென்றால் கொரோனா வைரசின் வீரியம் எப்படிப்பட்டது என்று உறுதி செய்ய முடியாத நிலையில் இப்படி மந்தை எதிர்ப்பு சக்தியை அடைய நினைப்பது சரியாகுமா?

இதுபற்றி அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் அமைப்பின் தலைவரான விஞ்ஞானி சேகர் மாண்டே கூறியதாவது…

“பெரும்பான்மையான மக்கள் ஒரு தொற்றுநோயை அடைந்து, அதன் மூலம் நோய் எதிர்ப்புச்சக்தியாக மாறும்போது, மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அடைய முடிகிறது. தடுப்பூசி மூலம் இந்த மந்தை எதிர்ப்புச்சக்தியை அடையலாம். அப்படிப்பட்ட தருணத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு கொரானா பரவுவது குறையும். ஏனென்றால் போதுமான எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் தொற்று கொண்ட மனிதர்கள் இருக்க மாட்டார்கள்.

இந்தியாவில் மந்தை எதிர்ப்புச்சக்தி அடைவதற்கான சாத்தியம் இருக்கிறதா என கேட்கிறீர்கள்.

இது ஆபத்தான ஒன்றுதான். நாட்டின் 60 முதல் 70 சதவீத மக்கள் தொகைக்கு தொற்று ஏற்படும்போது, அது எந்தவொரு நாட்டுக்கும் ஆபத்தானது.

கொரோனா வைரசை பொறுத்தமட்டில், உலகமெங்கும் தத்துவார்த்த மாடலிங் பலராலும் நடத்தப்பட்டுள்ளது. இதில் இருந்து தெரியவருவது, கொரோனா அலை இன்னும் வீசக்கூடும், மக்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்பதுதான்.

கொரோனா தொற்று பரவல் குறையலாம். ஆனால் இரண்டாவது அலையை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.”

இதுதான் விஞ்ஞானி சேகர் மாண்டேயின் உறுதியான கருத்தாக இருக்கிறது.

மந்தை எதிர்ப்புச்சக்தி தடுப்பூசி மூலம் வருவதை ஏற்க முடியும். ஆனால் பெரும்பான்மையான மக்களுக்கு தொற்று வந்து, அதன்மூலம் அவர்களுக்கு எதிர்ப்பு சக்தி வரவைப்பது என்பது சிங்கத்தின் வாயில் இருந்து சர்க்கஸ் காட்டுவதுபோலத்தான்!

< Most Related News >

Tags :-Coronavirus immune power a solution to the Covid19

Related posts

டி20 உலக கோப்பை கிரிக்கெட் : அக்டோபர் 17 இல் அமீரகத்தில் ஆரம்பம்..!

Tharshi

பண மோசடி : மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை..!

Tharshi

தகனம் செய்ய பணம் இல்லாததால் தாத்தா பிணத்தை பிரிட்ஜில் வைத்திருந்த பேரன்..!

Tharshi

Leave a Comment