இலங்கையில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகியவை அதிகாரப்பூர்வ அரசு மொழியாக உள்ளன. ஆனால், சமீப காலமாக தமிழ் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
அதாவது, இலங்கையில் எந்தவொரு அறிவிப்பு பலகையாக இருந்தாலும் அதில் தமிழிலும் இடம் பெற்று இருக்கும். ஆனால் இப்போது பல இடங்களில் அறிவிப்பு பலகைகளில் தமிழை காணவில்லை.
இலங்கை அரசு தற்போது சீனாவுடன் அதிக நட்போடு இருக்கிறது. அரசின் பல கட்டுமான திட்டங்களை சீன நிறுவனங்கள் அமைத்து வருகின்றன. இதன் காரணமாக இலங்கை அரசு சீன மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.
மேலும், தற்போது கொழும்பு துறைமுக நகர் திட்டத்தை சீனா அமைத்து வருகிறது. அந்த பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள சென்ட்ரல் பூங்காவுக்கு பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. அந்த பெயர் பலகையில் முதலில் சிங்களம், 2-வது ஆங்கிலம், 3-வது சீன மொழி இடம் பெற்றுள்ளது. அதில் தமிழ் மொழிக்கு இடம் அளிக்கவில்லை.
இலங்கையில் சிங்களர்களுக்கு அடுத்து அதிக மக்கள் தொகை கொண்டவர்களாக தமிழர்கள் உள்ளனர். ஆனாலும் தமிழை புறக்கணிக்கும் நோக்கத்துடன் இவ்வாறு பெயர் பலகைகளில் தமிழுக்கு இடம் அளிக்காமல் இருக்கிறார்கள் என்று தமிழ் மக்கள் பெரும்பாலானோர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கொழும்பில் டிஜிட்டல் நூலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது. அதிலும் தமிழை காணவில்லை. சிங்களம் சேர்க்கப்பட்டு இருக்கிறது.
இது சம்பந்தமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.யான சாணக்கியன் வெளியிட்டுள்ள செய்தியில், “இலங்கையில் தமிழ் மொழி காணாமல் போய் இருக்கிறது. விரைவில் சிங்கள மொழியும் காணாமல் போகும்” என்று கூறி இருக்கிறார்.
மேலும், இது தொடர்பாக சமூக வலைதளத்தில் கடுமையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
News Source : Maalaimalar
2 comments