தொடர்ந்து 10 ஆவது நாளாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதுடன், மாநிலத்தில் ஒரே நாளில் 27,936 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஆக்டிவ் கேஸ்கள் 3 லட்சத்தைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி மேலும் தெரியவருகையில்..,
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் வரும் ஜூன் 7 ஆம் திகதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து கொரோனா பரவல் மெல்லக் குறைந்து வருகிறது. இது சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 10 நாட்களாகத் தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 1.63 லட்சம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதில் 12 வயதுக்குட்பட்ட 897, வெளிமாநிலங்களிலிருந்து திரும்பிய 2 பேர் உட்பட மொத்தம் 27,936 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 20,96,516ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் சிகிச்சை பலனிற்றி 478 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 258 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 220 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். தமிழ்நாட்டில் தற்போது வரை 24,232 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். குறிப்பாக, மே மாதம் மட்டும் தமிழகத்தில் 10,039 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பால் மாநிலத்தில் சிகிச்சை பெற்று வரும் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை இன்றும் மூன்று லட்சத்தைக் கடந்தே பதிவாகியுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 3,01,781 கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். மேலும், ஒரே நாளில் 31,223 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் தற்போது வரை 17,70,503 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதலே தலைநகர் சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வருகிறது. இன்று சென்னையில் 2596 பேருக்கு வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 91 பேர் தலைநகரில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்போது தலைநகர் சென்னையில் வீட்டுத் தனிமையில் உள்ளவர்கள் உட்பட மொத்தம் 33,922 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேநேரம் கோவையில் கொரோனா பரவல் இதுவரை கட்டுக்குள் வரவில்லை. கோவையில் ஒரே நாளில் 3488 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. கோவையில் 39 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், மாநிலத்தில் செங்கல்பட்டு (1138), ஈரோடு (1742), சேலம் (1157), திருப்பூர்(1373), திருச்சி(1119) ஆகிய மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.