எதிரிகள் சுற்றி வளைப்பை சமாளிக்க முடியாமல், வெடிகுண்டை வெடிக்கச் செய்து போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பின் தலைவன் தற்கொலை செய்து கொண்டான்.
வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் நைஜீரியாவும் ஒன்று. இந்நாட்டை சுற்றி லிபியா, சூடான் மற்றும் சாட், கமரூன் ஆகிய நாடுகள் அமைந்துள்ளது.
இங்கு போகோ ஹராம், ஐ.எஸ்., அல்கொய்தா போன்ற பல பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஆப்ரிக்காவின் மிகவும் கொடிய பயங்கரவாத அமைப்பான போகோ ஹராம் அமைப்பின் தலைவனாக அபுபக்கர் ஷேக்கு செயல்பட்டு வந்தான்.
இதற்கிடையில், நைஜீரியாவில் செயல்பட்டு வரும் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பிற்கும் மற்றொரு பயங்கரவாத அமைப்பான மேற்கு ஆப்ரிக்க மாகாண இஸ்லாமிக் ஸ்டேட் குழுவிற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது.
இந்நிலையில், போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினருக்கும், மேற்கு ஆப்ரிக்க மாகாண இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பினருக்கும் இடையே கடந்த மே 18 ஆம் திகதி மோதல் ஏற்பட்டுள்ளது.
அப்போது, போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பின் தலைவன் அபுபகர் ஷேக்கை மேற்கு ஆப்ரிக்க மாகாண இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பின் பயங்கரவாதிகள் சுற்றி வளைத்தனர்.
எதிரிகள் சுற்றி வளைத்ததால் தன்னிடம் இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து போகோ ஹராம் தலைவன் அபுபக்கர் ஷேக் தற்கொலை செய்து கொண்டான்.
இந்த தகவலை மேற்கு ஆப்ரிக்க மாகாண இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாத அமைப்பின் தலைவன் அபு முசப் அல்-பர்னாவி தெரிவித்துள்ளான். போகோ ஹராம் தலைவன் அபுபக்கர் உயிரிழந்ததை நைஜீரிய அரசும் உறுதிப்படுத்தியுள்ளது.