குறும்செய்திகள்

புனே இரசாயன ஆலையில் தீ விபத்து : 18 பேர் பலி..!

18 Dead In Fire At Pune Sanitiser Firm

புனே மாவட்டம் முல்சி தாலுகா பிரன்கட் எம்.ஐ.டி.சி. தொழிற்பேட்டையில் எஸ்.வி.எஸ். அக்வா டெக்னாலஜிஸ் என்ற தனியார் இரசாயன ஆலையில், தண்ணீரை சுத்திகரிப்பதற்கான குளோரின்-டை-ஆக்சைடு மாத்திரைகள் மற்றும் சானிடைசர்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

ஆலையில் நேற்று சுமார் 45 தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டு இருந்தனா். அப்போது மாலை 4 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இரசாயன ஆலை என்பதால் தீப்பிடித்தவுடன் பற்றி எரியத் தொடங்கியது. அதிர்ச்சியில் திகைத்த தொழிலாளர்கள் தலைதெறிக்க வெளியே ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் பலர் வெளியே வரமுடியாமல் ஆலையில் சிக்கிக் கொண்டனர்.

இந்நிலையில், ஆலையில் தீ மள, மளவென பரவி அந்த பகுதியே புகை மண்டலமானது. தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் 6 வாகனங்களில் விரைந்து சென்றனர். அவர்கள் முதலில் ஆலையின் சுவரை ஜே.சி.பி. எந்திரத்தால் இடித்து உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணியில் துரிதகதியில் ஈடுபட்டனர். மேலும் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

அதன்பின்னர் ஆலையில் பார்த்த போது ஆங்காங்கே 18 தொழிலாளர்கள் உடல் கருகி பிணமாக கிடந்தனர். உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலரின் உடல் கரிக்கட்டையாகி கிடந்ததால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 15 பேர் பெண்கள் என்று கூறப்படுகிறது.

இது குறித்து புனே பெருநகர வளர்ச்சி குழும தீயணைப்பு படை தலைமை அதிகாரி தேவேந்திர போட்பொடே..,

‘‘இரசாயன ஆலை தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் பெண்களே அதிகம். ஆலையில் பேக்கிங் பிரிவில் தீப்பொறி ஏற்பட்டதாகவும், அதை தொடர்ந்து அருகில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தீப்பிடித்து எரிந்து விபத்து ஏற்பட்டதாகவும் ஆலை நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்” என்றார்.

இரசாயன ஆலையில் ஏற்பட்ட தீயின் கோரப்பசிக்கு 18 பேர் பலியான சம்பவம் மராட்டியத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தீ விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே தீ விபத்தை அறிந்து ஆலை அருகே அதிகளவில் மக்கள் திரண்டனர். எனவே அங்கு பாதுகாப்பு பணியில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

தீ விபத்து குறித்து அறிந்த பிரதமர் மோடி அதிர்ச்சி அடைந்தார். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த அவர், தலா ரூ.2 லட்சம் நிதியுதவியையும் அறிவித்தார். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அத்துடன், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

18 Dead In Fire At Pune Sanitiser Firm

Related posts

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 350 பேர் பூரண குணம்..!

Tharshi

தமிழ்நாட்டில் இன்று சற்று குறைந்த கொரோனா பாதிப்பு..!

Tharshi

சாவகச்சேரியில் நிறுவப்பட்டுள்ள சீன நிறுவனம் : இரு மொழிகளில் மாத்திரம் பெயர் பலகை..!

Tharshi

Leave a Comment