குறும்செய்திகள்

குழந்தை பிறந்து இரண்டு வயதை எட்டும் வரை கவனிக்க வேண்டியவை..!

Born baby care in Tamil

தாய் வயிற்றில் கருவாக உருவாகுவது முதல், குழந்தையாக பிறந்து, இரண்டு வயதை எட்டும் வரை உள்ள நாட்கள், அந்த குழந்தையின் வாழ்க்கையில் மிக முக்கியமானவை.

அதனை “முதல் 1000 நாட்கள்” என்று மருத்துவ உலகம் குறிப்பிடுகிறது. முதலில் தாயின் உணவு மூலமும், பின்பு நேரடி உணவு வழியாகவும் குழந்தைகள் பெறும் சத்துக்களே அவர்களை புத்திசாலிகளாகவும், ஆரோக்கியமானவர்களாகவும் உருவாக்குகிறது. அதாவது இரண்டு வயது வரைதான் குழந்தையின் மூளை மிக வேகமாக வளருகிறது.

தாய் வயிற்றில் சிசுவாக இருக்கும்போதே குழந்தையின் மூளை வளரத் தொடங்குகிறது. கருத்தரித்த நான்கு வாரத்தில் 10 ஆயிரம் திசுக்களாக அது உருவாக்கம் பெறும். 24 வாரங்களில் குழந்தையின் மூளை 10 பில்லியன் திசுக்களாகிவிடும். முதல் ஆயிரம் நாட்களில் மூளை வளர்ச்சி மட்டுமல்ல, இதர முக்கிய உறுப்புகளின் வளர்ச்சியும் வேகமாக நடக்கிறது.

குழந்தைக்கு முதல் ஆயிரம் நாட்களில் சத்துணவு குறைபாடு ஏற்பட்டால், பிற்காலத்தில் அதனை ஈடுசெய்வது கடினம். குழந்தையின் வளர்ச்சி, சிந்தனை, படிப்பு போன்ற அனைத்துக்குமான அடிப்படை கட்டமைப்புகள் அந்த முதல் காலகட்டத்தில் உருவாகுவதால், ஆயிரம் நாட்களில் ஒவ்வொரு நாளும் அந்த குழந்தைக்கு மிக முக்கியமான நாட்கள்தான்.

மேலும், கர்ப்பகாலத்தில் தாய் சுவாசிப்பதும், சாப்பிடுவதும் சிசுவிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதால், கர்ப்பத்திற்கு தயாராகும்போதே பெண்கள் வாழ்வியல்முறைகளில் மிகுந்த அக்கறை செலுத்தத் தொடங்கிவிட வேண்டும்.

குறிப்பாக சமச்சீரான சத்துணவை உட்கொள்ள வேண்டும். மது அருந்துதல், புகைப்பிடித்தல், போதைப் பொருட்கள் பயன்படுத்துதல், பிரச்சினைக்குரிய மருந்துகளை உட்கொள்ளுதல் போன்றவைகளை தவிர்க்க வேண்டும். வாழ்க்கை முறைகளை சிறப்பாக்கிக் கொள்ள வேண்டும்.

உணவில் இரும்பு, போலிக் ஆசிட், வைட்டமின் டி போன்றவை இடம்பெறுவது அவசியம். போலிக் ஆசிட் தாய்க்கும், சிசுவுக்கும் தேவையானதாகும். போலிக் ஆசிட் போதுமான அளவு கிடைக்காவிட்டால் சிசுவின் தண்டுவடம் மற்றும் மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். போலிக் ஆசிட் மாத்திரைகளை மகப்பேறு மருத்துவரின் பரிந்துரைப்படி சாப்பிடவேண்டும். ரத்தத்தில் இரும்பின் அளவு குறைந்து விட்டால் அது ரத்த சோகையை உருவாக்கிவிடும்.

வயதுக்கு தகுந்த உயரமின்மை, உயரத்திற்கு ஏற்ற உடல் எடையின்மை, மூளை வளர்ச்சிக்குறைபாடு, உடல் பருமன் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடக்கக்கால ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படுபவை என்று அத்துறை சார்ந்த நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

உலகத்திலேயே உயரம் குறைந்த குழந்தைகள் மிக அதிகமாக இந்தியாவில்தான் இருக்கிறார்கள் என்பதை உணரும்போது இதன் விளைவுகளை நம்மால் புரிந்துகொள்ள இயலும். நைஜீரியா, பாகிஸ்தான், சீனா, இந்தோனேஷியா போன்ற நாடுகளும் இந்த பட்டியலில் இருக்கின்றன.

குறிப்பாக இந்திய கிராம பகுதிகளில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒன்று வளர்ச்சியின்மையால் உயரக் குறைபாட்டுடன் காட்சியளிக்கிறது. யுனிசெப்பின் சர்வே, இந்தியாவில் ஐந்து வயதுக்கு கீழ் உள்ள 62 மில்லியன் குழந்தைகள் வளர்ச்சிக்குறைபாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று குறிப்பிடுகிறது.

இத்தகைய குழந்தைகள் பள்ளிப் பருவத்தில் கற்றல்குறைபாடு கொண்டவர்களாகி விடுகிறார்கள். அவர்களது எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்.

கர்ப்பிணிகள் இரண்டு பேருக்கான உணவினை உண்ணவேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் அதிக அளவில் உணவை சாப்பிட்டுவிட்டால் போதுமான அளவில் சத்துக்கள் கிடைத்துவிடும் என்று கூறுவதற்கில்லை. கர்ப்பிணி அதிக அளவில் சாதம் மட்டும் சாப்பிட்டுவிட்டாலும் அதுவும் போதுமானதல்ல.

தேவைக்கு அதிகமான கலோரி கர்ப்பிணியின் உடலில் சேர்ந்து விட்டால் இதர சத்துக்கள் உடலில் சேர முடியாத நிலை உருவாகிவிடும். அதிக கலோரி கொழுப்பாக மாறி உடலில் தங்கும். இது உடல் பருமன் மற்றும் சத்துக்குறைபாட்டிற்கு காரணமாகிவிடும்.

குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான புரோட்டின் சைவம் மற்றும் அசைவ உணவுகளில் இருக்கிறது. பால், முட்டை, மீன், கோழி இறைச்சி, பயறு- பருப்பு வகைகள் போன்றவைகளில் புரோட்டின் இருக்கிறது. அசைவ உணவுகளில் எல்லா வகை அமினோ அமிலங்களும் இருக்கின்றன. சைவ உணவுகளில் சிலவகை அமினோ அமிலங்கள் குறைவாக உள்ளன.

அதனால் கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் தங்கள் உணவில் அவசியம் பால் மற்றும் முட்டையை சேர்த்துக்கொள்ளவேண்டும். ஆறு கப் சாதத்தில் கிடைக்கக்கூடிய புரோட்டின் ஒன்றரை முட்டையில் இருக்கிறதென்பது குறிப்பிடத்தக்கது.

மீன்களில் 15 சதவீதம் அளவுக்கு புரோட்டின் சத்து இருக்கிறது. ஆறு மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது. அந்த காலகட்டத்தில் அவர்களுக்கு வேறு எந்த உணவும் தேவையில்லை. குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் வளர்ச்சிக்கும் அது போதுமானது.

Born baby care in Tamil

Related posts

பிரபல நடிகரின் திருமணத்தில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா தொற்று..!

Tharshi

இலங்கை மதுவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை..!

Tharshi

ஆசையாக சிக்கன் வறுவல் ஆர்டர் செய்த பெண் : கைக்குட்டையை வறுத்து சூடாக அனுப்பி வைத்த ஹோட்டல்..!

Tharshi

Leave a Comment