இராஜகிரிய − ஒபேசேகரபுர பகுதியில், போதைப்பொருள் சுற்றி வளைப்புக்காக சென்ற வேளை, பொலிஸ் அதிகாரியொருவரை விபத்துக்குள்ளாக்கி தப்பிச் சென்ற சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தலை மறைவாகியுள்ள சந்தேகநபரை கைது செய்வதற்கு 4 பொலிஸ் குழுக்களும், 2 புலனாய்வு அதிகாரிகள் அடங்கிய குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்..,
போதைப்பொருள் சுற்றி வளைப்புக்காக சென்ற வேளை, சந்தேக நபர் பொலிஸ் அதிகாரியொருவரை விபத்துக்குள்ளாக்கி தப்பிச் சென்ற போது, CCTV கமராவில் பதிவான காட்சிகளின் ஊடாக நடத்தப்பட்ட விசாரணைகளில், விபத்தை ஏற்படுத்தி தப்பிச் சென்ற காரின் இலக்கத்தை கண்டறிய முடிந்துள்ளது.
CBK – 3981 இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள TOYOTA VITZ ரக கார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த வாகன இலக்கத்தின் ஊடாக நடத்தப்பட்ட விசாரணைகளில், குறித்த கார் மிரிஹான பகுதியிலுள்ள விலாசமொன்றில் பதிவு செய்யப்பட்ட கார் என்பது உறுதியாகியுள்ளது.
இதையடுத்து, குறித்த விலாசத்திற்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள், விசாரணைகளை நடத்தியிருந்தனர். எனினும், இந்த வீட்டின் உரிமையாளர் நேற்றிரவு (20) தனது மனைவியுடன் வீட்டை விட்டு வெளியேறியதாக அவரது உறவினர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
அத்துடன், அவரது கையடக்கத் தொலைபேசி செயலிழந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
21 comments