குறும்செய்திகள்

சனிப்பெயர்ச்சி 2023 பலன்கள் : திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மூலம்..!

திருவாதிரை:

சனி பகவான் உங்களின் பதினெட்டாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

புதன் – ராகு அம்சத்தில் பிறந்த நீங்கள் பிடிவாத குணத்தை மட்டும் தளர்த்திக் கொண்டால் காரிய வெற்றி உங்களைத் தேடி வரும்.

இந்த சனிப்பெயர்ச்சியில் மனக்கவலை நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். பணவரத்து கூடும். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கலாம். வெளியூர்ப் பயணங்கள் மனதுக்கு சந்தோஷத்தைத் தருவதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். கொடுக்கல்வாங்கலில் கவனம் தேவை. உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டை உங்களுக்குப் பெற்றுதரும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாதுர்யமான பேச்சின் மூலம் முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்தபடி நிதிநிலை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளைக் கவனிக்க வேண்டி இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் டென்ஷன் உண்டாகலாம். கணவன் மனைவிக்கிடையே கோபத்தை விட்டுவிட்டு இதமாகப் பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும்.

கலைத்துறையினர் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். எதிரிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். திட்டமிட்டு எதையும் செய்யுங்கள்.

அரசியல்வாதிகளுக்கு தலைமைப் பதவிகளில் உள்ளவர்கள் சிறப்பான பலனைப் பெறலாம். நல்ல வருமானம் கிடைக்கும்.

பெண்களுக்கு எடுத்த காரியங்களைச் செய்து முடிப்பதில் காரிய தாமதம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு உயர்கல்வி கற்கத் தேவையான பணவசதி கிடைக்கும். கூடுதலாக கவனம் செலுத்தி படிப்பது வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: நடராஜருக்கு தீபம் ஏற்றி வணங்க செல்வம் சேரும். செல்வாக்கு உயரும். இந்தச் சனிப்பெயர்ச்சியால் எல்லா வகையிலும் லாபம் ஏற்படும்.

75% நல்ல பலன்கள் ஏற்படும்.

புனர்பூசம்:

சனி பகவான் உங்களின் பதினேழாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

குருவை நட்சத்திர அதிபதியாகக் கொண்ட நீங்கள் நிதானமானவர்கள். அதே வேளையில் பொருளாதார விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த சனிப்பெயர்ச்சியில் எதிர்ப்புகள் விலகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை இருக்கும். காரியத் தடை, வீண் அலைச்சல் ஏற்படலாம். கெட்ட கனவுகள் வரலாம். திடீர் கோபம் ஏற்படும். எதிர்பாலினத்தாரிடம் கவனமாகப் பழகுவது அவசியம்.

தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆர்டர் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். பழைய பாக்கிகள் வசூலாவது மனதிருப்தியைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச்சுமையால் டென்ஷனுடன் காணப்படுவார்கள். நிலுவையில் உள்ள தொகைகள் வந்து சேரலாம்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே சின்னசின்ன கருத்து வேற்றுமைகள் வரும். பிள்ளைகளின் செயல்பாடுகள் ஆறுதலைத் தரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

கலைத்துறையினருக்கு வேலை விஷயமாக அலைச்சல் இருக்கும். அதன்மூலம் மனமும் உடலும் சோர்வடையலாம். எனினும் உயர்வு உண்டு.

அரசியலில் உள்ளவர்களுக்கு அதிகமாக பாடுபட வேண்டியதிருக்கும். உழைப்பிற்கு ஏற்ற பலனும் கிடைக்கும். பணம் வந்து குவியும்.

பெண்களுக்கு அடுத்தவர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம். கொடுத்த கடனை திரும்பப் பெறுவதில் முழுமூச்சுடன் செயல்படுவீர்கள்.

மாணவர்களுக்கு கவனத்தை சிதற விடாமல் வகுப்பைக் கவனிப்பது அவசியம். கூடுதல் நேரங்கள் ஒதுக்கி பாடங்களைப் படிக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: ஸ்ரீராமருக்கு பானகம் நிவேதனம் செய்து வணங்கி வாருங்கள். எல்லா நன்மைகளும் உண்டாகும். மங்கல காரியங்களில் இருந்து வந்த தடைகள் அகலும்

71% நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

பூசம்:

சனி பகவான் உங்களின் பதினாறாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

சந்திரன் – சனி அம்சத்தில் பிறந்த நீங்கள் கடுமையாக உழைத்து வாழ்வில் முன்னேறுபவர்கள்.

இந்த சனிப்பெயர்ச்சியில் மனக்கலக்கம் உண்டாகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாக வேண்டி வரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடலாம். வீண் செலவு, உடல் நல பாதிப்பு ஏற்படலாம்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு நீடிக்கும். தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்கப் பெறுவார்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையைப் பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும்.

கலைத்துறையினர் எந்த விஷயத்திலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நன்மையைத் தரும்.

அரசியல்வாதிகளுக்கு பிற கட்சிகளில் உள்ளவர்களை இகழ்ந்தும் கேலியும் செய்யக்கூடாது. அதனால் வீணான வழக்குகள் உங்கள் மேல் வரலாம்.

பெண்களுக்கு மனதில் வீண்குழப்பம் உண்டாகும். உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை நாடி சிலர் வரக்கூடும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன்களைத் தரும். சக மாணவர்களின் நட்பும் கிடைக்கும்.

பரிகாரம்: குபேரனை வணங்க மன அமைதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும்

65% நற்பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

ஆயில்யம்:

சனி பகவான் உங்களின் பதினைந்தாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

சந்திரன் – புதன் அம்சத்தில் பிறந்த நீங்கள் எடுத்த முடிவில் மாறாத கொள்கை கொண்டவர்கள்.

இந்த சனிப்பெயர்ச்சியில் எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியாமல் காரிய தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். வீண் வாக்குவாதத்தால் பகை உண்டாகலாம். பயணத்தில் தடங்கல், வீண் செலவு போன்றவை ஏற்படும். அதேசமயம், பணவரவு இருக்கும். நன்மைகள் உண்டாகும். நட்சத்திராதிபதி புதன் சஞ்சாரத்தால் வாகன யோகத்தைப் பெறுவீர்கள். பெரியோர்களின் உதவி கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். எதிலும் தயக்கமோ பயமோ ஏற்படாது.

தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன்களைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவிகள் கூடுதல் பொறுப்பு கிடைக்கப் பெறுவார்கள். அலுவலகப் பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த குடும்பம் தொடர்பான பிரச்சினைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளின் கல்விக்காக பாடுபட வேண்டி இருக்கும்.

கலைத்துறையினருக்கு பிறமொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.

அரசியலில் உள்ளவர்கள் பணவரவு காண்பார்கள். ஆனால் பதவி கிடைப்பதில் தாமதமாகலாம். சுயநலம் விடுத்து பொதுநலம் கருதி பாடுபடவும்.

பெண்களுக்கு பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.

பரிகாரம்: நாகதேவதையை வணங்கி வாருங்கள். காரியத் தடைகள் நீங்கும். நிலுவையில் உள்ள பணம் வசூலாகி, உங்கள் கைக்குக் கிடைக்கும். இந்த சனிப்பெயர்ச்சியால், வீடு மனை பூமி வாங்குகிற யோகங்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

68% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

மூலம்:

சனி பகவான் உங்களின் ஐந்தாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

குரு – கேது கிரக அமைப்பில் பிறந்தவர்களான நீங்கள் நேர்மையை தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படுபவர்கள்.

இந்த சனிப்பெயர்ச்சியில் விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். மனதில் குழப்பம் உண்டாகலாம். பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. அடுத்தவருடன் சின்னச்சின்ன சண்டைகள் ஏற்படலாம். வயிறு தொடர்பான நோய் ஏற்படலாம். பணவரவு இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்தபடி பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்குக் கோபத்தைத் தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள்.

கலைத்துறையினருக்கு எதிரிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். உடல்நலனில் சிறப்பு கவனம் தேவை.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் நல்ல பெயர் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த பண வரவு இருக்கும்.

பெண்களுக்கு காரியத் தடையால் மனக்குழப்பம், டென்ஷன் உண்டாகலாம். பணவரத்து இருக்கும்.

மாணவர்கள் எவரிடமும் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்துச் செல்வது நல்லது. மிகவும் கவனமாக பாடங்களைப் படிப்பது வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அர்ப்பணித்து வணங்கி வாருங்கள். வீண் அலைச்சல் குறையும். இந்த சனிப்பெயர்ச்சியால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்

75% நற்பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

Related posts

யுவன் சங்கர் ராஜா கொடுத்த “வலிமை” பட அப்டேட்..!

Tharshi

கொரோனா தொற்று பரவலை தடுக்க வீட்டில் இதையெல்லாம் செய்ய மறக்காதீங்க..!

Tharshi

ISIS உடன் தொடர்புடைய ஒருவர் காத்தான்குடியில் கைது..!

Tharshi

Leave a Comment