குறும்செய்திகள்

10 அணிகள் பங்கேற்கும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று ஆரம்பம்..!

Copa America football tournament Starting today

தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கான 47 வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்டு பிரேசிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஜூலை) 10 ஆம் திகதி வரை நடக்கிறது.

10 அணிகள் பங்கேற்கும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று ஆரம்பிக்கிறது. இதன் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரேசில் – வெனிசுலா அணிகள் மோதுகின்றன.

முதலில் இந்த போட்டியை கொலம்பியா, அர்ஜென்டினா ஆகிய நாடுகள் இணைந்து நடத்த இருந்தன. அதிபருக்கு எதிராக உள்நாட்டில் போராட்டம் நடந்ததை அடுத்து கொலம்பியா இந்த போட்டியை நடத்தும் பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டது. கொரோனா பரவல் அதிகரிப்பு எதிெராலியாக அர்ஜென்டினாவும் கடைசி நேரத்தில் பின்வாங்கியது. இதையடுத்து இந்த போட்டி பிரேசிலின் 4 நகரங்களில் உள்ள 5 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெற உள்ளது.

இதில் கலந்து கொள்ளும் 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் அர்ஜென்டினா, பொலிவியா, உருகுவே, சிலி, பராகுவே, ‘பி’ பிரிவில் பிரேசில், கொலம்பியா, வெனிசுலா, ஈகுவடார், பெரு ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

நடப்பு சாம்பியனான பிரேசில் அணி கடந்த முறை (2019) எந்தவொரு ஆட்டத்திலும் தோல்வியை சந்திக்காமல் கோப்பையை உச்சி முகர்ந்தது. அதேபோல் நெய்மார் தலைமையிலான பிரேசில் அணி மீண்டும் கோப்பையை வசப்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டு இருக்கிறது.

14 முறை சாம்பியனான அர்ஜென்டினா அணி சமீப காலங்களில் ஜொலிக்காவிட்டாலும் அந்த அணியை குறைத்து மதிப்பிட முடியாது. கேப்டன் லயோனஸ் மெஸ்சி, செர்ஜியோ அகுரோ, ஏஞ்சல் டி மரியா ஆகிய சிறந்த தாக்குதல் ஆட்டக்காரர்கள் போட்டியின் போக்கை அதிரடியாக மாற்றக்கூடியவர்கள்.

இதேபோல் அதிக முறை (15) சாம்பியனான உருகுவே அணியையும் புறந்தள்ளி விட முடியாது. அந்த அணியில் லூயிஸ் சுவாரஸ், எடிசன் கவானி போன்ற நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

தொடக்க நாளான இன்று மாலை பிரேசிலியா நகரில் நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் பிரேசில்-வெனிசுலா அணிகள் மோதுகின்றன. இதனை அடுத்து இரவு குயீபாவில் நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் கொலம்பியா-ஈகுவடார் அணிகள் சந்திக்கின்றன. இந்திய நேரப்படி மறுநாள் அதாவது நாளை அதிகாலை 2.30 மற்றும் 5.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிகளை சோனி சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.142 கோடியாகும். வாகை சூடும் அணிக்கு ரூ.47 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.25 கோடியும் பரிசாக கிடைக்கும்.

மேலும், வெனிசுலா அணியினருக்கு நடத்திய கொரோனா பரிசோதனையில் வீரர்கள், உதவியாளர்கள் என 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளதாக பிரேசில் சுகாதாரத்துறை நேற்று தெரிவித்தது. ஆனால் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.

எனினும், அவர்களுக்கு பதிலாக எத்தனை மாற்று வீரர்களை வேண்டுமென்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று போட்டி அமைப்பு குழு கூறியுள்ளது. இதனால் இந்த ஆட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என்று தெரிகிறது.

Copa America football tournament Starting today

Related posts

2வது டி20 : இலங்கைக்கு இமாலய இலக்கு வைத்த இந்தியா..!

Tharshi

உசேன் போல்டின் இரட்டைக் குழந்தைகள் பெயர் இணையத்தில் வைரல்..!

Tharshi

30-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment