குறும்செய்திகள்

ஐ.பி.எல். கிரிக்கெட் : 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

IPL Cricket Kolkata Knight Riders won by 7 wickets

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

அந்த அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் குவிண்டன் டி காக் ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய டி காக் கொல்கத்தா வீரர்களின் பந்து வீச்சை சிக்சர்களாக பறக்க விட்டார். மறுபுறம் ரோகித் சர்மா பவுண்டரிகளாக விளாசினார்.

இதனால், பவர்பிளே முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் எடுத்தது. 4 பவுண்டரிகளை விளாசிய ரோகித் சர்மா 33 ரன்களில் வெளியேறினார். சிறப்பாக விளையாடிய டி காக், ஐ.பி.எல் போட்டிகளில் தனது 16-வது அரைசதத்தை பதிவு செய்தார். அவர் 42 பந்துகளில் 3 சிக்சர் உள்பட 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஒரு கட்டத்தில் மும்பை அணி 170 ரன்களை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொல்கத்தா அணியின் நேர்த்தியான பந்துவீச்சால் 150 ரன்களை தாண்டுவதே கடினம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய போலார்டு 15 பந்துகளில் 2 பவுண்டரிகள், 1 சிக்சர் உள்பட 21 ரன்கள் குவித்து வெளியேறினார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி தரப்பில் லுகி பெர்குசன், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சுனில் நரைன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சார்பில் வெங்கடேஷ் ஐயர் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.

இந்த ஜோடியில் சுப்மன் கில் 13 (9) ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து வெங்கடேஷ் ஐயருடன், ராகுல் திரிபாதி ஜோடி சேர்ந்தார். அதிரடியில் மிரட்டிய இந்த ஜோடி, மும்பை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தது. இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் மும்பை அணியின் பந்து வீச்சாளர்கள் திணறினர்.

பின்னர் இந்த ஜோடியில் வெங்கடேஷ் ஐயர் 30 பந்துகளில் 53 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியில் கலக்கிக் கொண்டிருந்த திரிபாதி தனது அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார்.

அடுத்தாக களமிறங்கிய கேப்டன் மோர்கனுடன், ஜோடி சேர்ந்த திரிபாதி தொடர்ந்து அதிரடி காட்டி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். வெற்றிபெற 9 ரன்கள் தேவைப்பட்டநிலையில் மோர்கன் 7 (8) ரன்களில் வெளியேறினார்.

இறுதியில் ராகுல் திரிபாதி 74 (42) ரன்களும், நிதிஷ் ராணா 5(2) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் கொல்கத்தா அணி 15.1 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 159 ரன்கள் எடுத்தது. மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

IPL Cricket Kolkata Knight Riders won by 7 wickets

Related posts

தண்டவாளத்துல தலைய வைக்க போறவன் அதையா பார்ப்பான் : கணவன் மனைவி நகைச்சுவை..!

Tharshi

இளம் வயதிலேயே ஏற்படும் வயதான தோற்றத்தை தடுக்கும் கிரீன் டீ பேஸ் பேக்..!

Tharshi

பல்வேறு சர்வதேச விருதுகளை குவித்து சாதனை படைத்து வரும் ஆர்யா படம்..!

Tharshi

Leave a Comment